பேராவூரணியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நீதிமன்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்ய வருகைதந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுரேஷ்குமார் தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள காலியிடம், பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள இடங்களை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின், பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஜெயஸ்ரீ, மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அழகேசன், தாசில்தார் தெய்வானை, பார் கவுன்சில் செயலாளர் சிவேதிநடராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.