தஞ்சாவூர், மே.2 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மைத் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பேராவூரணி ஒன்றியம் வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு கிராமத்தில் மண் மாதிரிகள் சேகரித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ். ராணி தலைமை வகித்தார். இந்த சிறப்பு முகாமில் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மண்மாதிரிகள் சேகரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மண்மாதிரிகள் எடுப்பதன் அவசியம் , மண் மாதிரிகள் எடுக்கும் முறைகள், மண்ணின் தன்மை, மண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை , மண் மாதிரி முடிவுகளை அறிந்து அதற்கேற்ப மண்ணில் இடுதல் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஊராட்சியில் வேளாண்மை உதவி அலுவலர் வர்ஷா, வேளாண்மை துணை கோவிந்தராஜன், பயிர் அறுவடை பரிசோதனை களப்பணியாளர் மனோபாலன் ஆகியோருடன் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைந்து மண்மாதிரிகள் சேகரித்தனர்.
மேலும், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள், மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்படுத்த மெட்டாரைசியம் என்னும் உயிர்ப்பூசணக் கொல்லி பயன்படுத்தும் முறைகள் எடுத்துரைக்கப்பட்டன.