தஞ்சாவூர், ஜூன்.19 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில், முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைப்பூண்டு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு பேசியது, "இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சில்லா உணவை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். உணவு நஞ்சாவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இயற்கை உரங்களை கைவிட்டதால் இன்றைக்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். இயற்கை எரு, மண்புழு உரம், இயற்கை பூச்சி விரட்டிகள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும். நமது பகுதியில் நெல் விவசாயம் குறைந்து, தென்னைக்கு மாறிவிட்டது. மனம் சோர்வாக உள்ளபோது தென்னந்தோப்புகளிலோ வயல் வெளிகளிலோ சுற்றி வந்தால் மனம் அமைதி பெறும். தஞ்சை மாவட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆக உள்ளது. தமிழக அரசின் வேளாண் துறையின் கீழ் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லா உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும்" இவ்வாறு பேசினார்.
பேராவூரணி வட்டார வேளாண் அலுவலர் யயசச எஸ்.ராணி பேசுகையில், "தற்போது விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைப் பூண்டு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை நெல் சாகுபடிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தென்னைக்கு பயன்படுத்தக் கூடாது. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. சிறுதானியம் பயிர் வகைகளுக்கு, எண்ணெய் வித்து பயிர்களுக்கு ஏக்கருக்கு 1200 வழங்கப்படுகிறது. அங்கக விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதிரி பண்ணை அமைக்க ரூ.10 ஆயிரம் அரசு வழங்கி வருகிறது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள், வேளாண் பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.