தஞ்சாவூர், ஜூன்.10 -
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு, அரசுப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
பள்ளிகள் திறந்த நாளிலேயே விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் அரசின் சலுகைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வட்டாரக் கல்வி அலுவலர் கலா ராணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாட நூல்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், ஆசிரியர்கள் ரேணுகாதேவி, ஹாஜாமைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 140 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.