தஞ்சாவூர், ஜூன்.11 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார முதன்மை வேளாண்மை விரிவாக்க மையத்தில், இடுபொருட்கள் விநியோகம் பணமில்லா பரிவர்த்தனை மூலம் செயல்படுத்தும் முறை நடைமுறை படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
"விவசாயிகள் இடுபொருட்கள் பெற விரிவாக்க மையத்திற்கு வரும்போது இடுபொருட்களுக்கான தொகையினை பணமாக வழங்குவதை தவிர்த்து நெட் பேங்கிங் என்று சொல்லப்படும் இணையவழி வங்கி மூலமாகவோ, மொபைல் பேங்கிங் மூலமாகவோ அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
பணமில்லா பரிவர்த்தனை முறையினை பின்பற்றுவதன் மூலம் ஏடிஎம் சென்று பணம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணப்பாதுகாப்பு கிடைப்பதுடன் திருட்டு போன்ற நிகழ்வுகளினால் பண இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பும் கிடைக்கப்பெறுகிறது.
ஆகையினால் இந்த பணமில்லா பரிவர்த்தனை முறை ஜூன் மாதத்தில் 30 விழுக்காடும், ஜூலை மாதத்தில் 50 விழுக்காடும், ஆகஸ்ட் மாதத்தில் 70 விழுக்காடும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 100 விழுக்காடும், பி.ஓ.எஸ் எனப்படும் விற்பனை முனையக் கருவி மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஆகையினால் விவசாயிகள் அனைவரும் இந்த பணமில்லா பரிவர்த்தனை முறையினை பயன்படுத்தி இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.