தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் திமுக தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு, சேதுசாலை, முதன்மை சாலை வழியாக பெரியார் சிலை வரை சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் மு. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுபசேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் சேகர், மற்றும் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர்.