தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Unknown
0

தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்திற்கு மஞ்சள், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றத்தின்போது பஞ்சமூர்த்தி சுவாமிகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. விழாவில் அரண்மனை தேவஸ்தான கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ், மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலையில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம், வெண்ணைத்தாழி அலங்காரம், பல்லக்கில் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. மேலும் தினமும் காலையில் திருமுறை விண்ணப்பமும், மாலையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, சின்னமேளம் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 

தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்தமாதம்(மே) 5–ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்–கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள். அங்கு தியாகராஜர்–கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 8–ந் தேதி காலையில் தியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நடராஜர் நான்கு வீதிகளில் உலா வருகிறார். மதியம் சந்திரசேகர் கோவிலுக்குள் உலாவந்து தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு மேல் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top