பேராவூரணி அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது.

Unknown
0


 

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எப்பொழுது விழுமோ என்ற நிலையில் உள்ளது. உடனடியாக கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணியை அடுத்த புதுப்பட்டினம் கடலோர கிராமம் ஆகும். இங்கு மிகவும் பின் தங்கிய சிறுபான்மையின மக்கள், மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஜூம்ஆ பள்ளிவாசல் எதிரில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.இங்குள்ள பள்ளிக்கட்டிடம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் 5-11-1975 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய ஒன்றியப் பெருந்தலைவர் நாடியம் எஸ்.இராமையன் தலைமையில், அப்போதைய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் க.இராசாராம் திறந்து வைத்துள்ளார். பழமையான இக்கட்டிடத்தில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்ட நிலையில் உள்ளது. கட்டிடத்தின் உட்புறச்சுவர் மற்றும் வெளிப்புற சன்ஷேட் உடைந்தும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் காணப்படுகின்றன. அருகிலேயே இவ்வளாகத்தில் அங்கன்வாடியும் உள்ளது. ஏராளமான சிறுவர்கள் நடமாடும் இப்பகுதியில் கட்டிடங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் வகையில் அபாயகரமான நிலையில் உள்ளன.பள்ளியில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற வகையில் பழமையான நிலையிலேயே உள்ளன. ஆங்காங்கே எலிப்பொந்துகள் உள்ளதால் கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. பின்பக்கம் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் விஷ ஜந்துக்கள் உள்ளே நுழைந்து விடும் அபாயமும் உள்ளது. பள்ளி கட்டிடத்தின் ஜன்னல்கள் உடைந்தும், மூட முடியாத நிலைமையிலும் உள்ளன. மழைக்காலங்களில் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத வகையில் மழைச்சாரல் உள்ளே விழுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் பயன்பாட்டிற்கான தண்ணீர் தொட்டிகள் பல காலங்களாக சுத்தம் செய்யப்படாமல் பாசிபடர்ந்த நிலையில் காணப்படுகிறது.பள்ளி வளாகத்திற்கு வெளியே நுழைவாயில் பகுதியில் வடிகால் வாய்க்காலில் போடப்பட்ட சிமெண்ட் பலகைகள் உடைந்த நிலையில் இருப்பதால் மாணவர்கள் தவறி விழுந்து காயம்படும் நிலை உள்ளது. மழை மற்றும் சூறைக்காற்று வீசும் சமயங்களில் பக்கத்தில் உள்ள சுனாமி பாதுகாப்பு இல்லத்தில் வகுப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் என பல அரசு அதிகாரிகளையும், புதுப்பட்டினம் கிராமத்தினர், ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்கள் அளித்தும் கிடப்பில் போடப்பட்ட நிலையே உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அரசு அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு சென்றும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னதாக, புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top