வறண்ட ஏரிகள், குளங்கள் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேராத காவிரி தண்ணீர்.

Unknown
0


கல்லணைக் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இதுவரை கடைமடைப் பகுதிகளை எட்டிப்பார்க்கவில்லை. பருவமழை பொய்த்துப்போனதாலும் கடைமடைப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் இவ்வாண்டும் சாகுபடி நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப்பகுதியான பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளுக்கு, மேட்டூரில் இருந்து கல்லணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அங்கிருந்து புது ஆறு, கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் வழியாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் 45 தினங்களாகியும் இதுவரை கடைமடைப் பகுதிக்கு வந்து சேராமல் உள்ளது. கடந்த ஆண்டுகளில் பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு அவ்வாறு முறைவைத்து வழங்கப்படவில்லை.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்தசில தினங்களுக்கு முன்பு பருவமழை ஓரளவு கைகொடுத்தது. சிலஇடங்களில் கனமழை பெய்து வயல்களில் தண்ணீர் புகுந்தது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக கடைமடைப் பகுதிகளான பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகியபகுதிகளில் இயற்கை வஞ்சித்தது. சில மில்லிமீட்டர் அளவே பெய்தமழை காரணமாக வறட்சி தான்காணப்படுகிறது. போதிய மழைஇல்லாததாலும், கிளை வாய்க்கால் களில் தண்ணீர் வராததாலும் ஏரி,குளங்கள் நிரப்பப்படாமல் வறண்டுக் கிடக்கிறது.

பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் வராததாலும், ஏரி, குளங்களை நம்பிவிவசாயம் செய்யும் விவசாயிகளும் இதுவரை நாற்று விடும் பணியை தொடங்கவில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோன நிலையில்ஆழ்துளைக்கிணறுகள் மூலம் செய்யும் விவசாயமும் கேள்விக்குறியாக உள்ளது.1000 ஏக்கருக்கும் மேல் பாசனம்தரக்கூடிய விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், கொரட்டூர், ஊமத்தநாடு, நாடியம், பெரியகுளம், கண்டிக்குளம் போன்ற இப்பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. பல இடங்களில் நீர்வழி வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், மழைநீர் ஏரி, குளங்களை சென்றுசேராமல், வழிந்தோடி காட்டாறுகளில் சென்றடைந்து கடலில் கலந்துவீணாகிறது. எனவே காட்டாறுகளில் சிறிய அளவிலான தடுப்பணைகளை அமைத்து நீரை சேமிக்கஉரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தடுப்பணைகளை அமைப்பதன்மூலம் நீராதாரம் பெருகும்; விவசாயம் செழிக்கும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்கலாம். கடைமடைப்பகுதிக்கு முறை வைக்காமல் தொடர்ந்து 20 தினங்களுக்கு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட்டால், இதனை பயன்படுத்தி நடவுப்பணி மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில், மாவட்டத்தலைவர் என்.வி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப்பையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஒன்றியச்செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, விவசாய சங்க ஒன்றிய நிர்வாகிகள் ராமலிங்கம், வீரப்பெருமாள் ஆகியோர் பேராவூரணி ஒன்றியத்தில் பெரியஏரி, அம்மையாண்டி ஏரி, ஆவணம்பெரியார் ஏரி, கண்டியர் ஏரி மற்றும்சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், கொரட்டூர், ஊமத்தநாடு, நாடியம் ஏரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் சாமி.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தஞ்சை மாவட்டத்தில்கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரும்வாரிகள் அடைபட்டுள்ளன. தூர்வாருதல், மராமத்து செய்தல், மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் சரிவர நடக்கவில்லை. பலஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள், நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் அகற்றப்படாமல் புதர்போல காணப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகவே இப்பகுதியில் விவசாயம் கைவிட்டுப் போன நிலையில் உள்ளது. ஒரு போகம் விவசாயம் நடைபெற்று வந்ததும் தற்போது கேள்விக்குறியாக உள் ளது.கடைமடைப் பகுதி ஏரி, குளங்களில் உடனடியாக தண்ணீர் நிரப்பவேண்டும். கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் திறந்து விடவேண்டும். பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் கடந்த 15 ஆண்டுகளாக முறையாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. சில நேரங்களில் பாதம் நனையும் அளவிற்கு தண்ணீர்திறந்து விடப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஆனந்தவல்லி வாய்க்கால் என்பதே இல்லை என்றநிலை உருவாகி விடும். பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் உள்ள கல்யாண ஓடைவாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால்,குலமங்கலம் வாய்க்கால், வடசேரி வாய்க்கால், அம்மணிசத்திரம் வாய்க்கால், அலிவலம் வாய்க்கால் களில் சரியாக தண்ணீர் வந்து சேரவில்லை.

மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு போதிய அளவில் தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆய்வின் போது நாங்கள் கண்டவிபரங்களை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து கூறி, கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் விட வலியுறுத்துவோம். திருவாரூர், நாகை மாவட்ட நிலைமைகளை வைத்து தஞ்சை கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடாமல் நிறுத்தி வைத்தது தவறு.

வெள்ளப்பகுதியையும், வறட்சி பகுதியையும் ஒன்றாக கருதக்கூடாது. கடைமடைப் பகுதியில் தண்ணீர் இன்றி வறட்சியான சூழல்நிலவுகிறது. சோலைக்காடு, பெருமகளூர் பகுதிகளில் கால்நடைகள் தண்ணீருக்காக தவிக்கும் நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கடைமடைப் பகுதி ஏரி, குளங்களை நிரப்பித் தரவேண்டும். மெயின் வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடவேண்டும். இல்லையென்றால் நவம்பர் 27 திங்கட்கிழமை முதல்பேராவூரணியில் பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பாக விவசாய சங்கம் சார்பில் விவசாயிகளை திரட்டி மாபெரும் தொடர்காத்திருப்பு போராட்டம் நடத்தப் படும்” என்றார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top