தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் தொடங்கின.

Unknown
0
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடப்பது வழக்கம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவுதண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தாமதமாக அக்டோபர் 2-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமாக நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்கூட்டியே சம்பா நெல் நடவு செய்யப்பட்டது.

முன்கூட்டியே நடவுசெய்யப்பட்ட இடங்களில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி விட்டன. ஒரத்தநாடு பகுதிகளில் தற்போது சம்பா நடவு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சம்பா நெல் அறுவடை தொடங்கியதையடுத்து நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதால் 185-க்கும் குறைவான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் குறுவை சாகுபடிக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதையடுத்து தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் முதல்கட்டமாக அறுவடை நடைபெறும் இடங்களில் நெல்லை கொள்முதல் செய்வதற்கு வசதியாக அந்தந்த பகுதிகளில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஓரிருநாளில் திறக்க நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபாலன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மேலும் அறுவடை பணிகள் தீவிரமடையும் காலக்கட்டத்தில் மேலும் அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. அதாவது இந்த ஆண்டு 300-க்கும் அதிகமான நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொள்முதல் நிலைய எழுத்தர் மற்றும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபாலன் கூறினார்.

தஞ்சை மண்டலத்திற்கு இந்த ஆண்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 150 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதலை பொறுத்தவரை 1-10-2017 முதல் 30-9-2018 வரை நடப்பு பருவம் என்பதால் இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏ ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1660-க்கும், பொது ரகம் ரூ.1600-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது ஈப்பரதம் 17 சதவீதம் வரை உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நுகர்பொருள் வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கும் உடனடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கிலே பணம் பட்டுவாடா செய்யப்படும். தஞ்சை மண்டலத்தில் நெல் சேமிப்பு கிடங்குகள் 2 செயல்பட்டு வந்தன. தற்போது புதிதாக சென்னம்பட்டியில் 39 ஆயிரம் டன் இருப்பு வைக்கும் வகையிலும், புனல்குளத்தில் 38 ஆயிரம் டன் இருப்பு வைக்கும் வகையிலும் 2 சேமிப்புக்கிடங்குள் திறக்கப்பட்டுள்ளன என நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபாலன் தெரிவித்தார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் உடனடியாக சாக்குகளில் அடைக்கப்பட்டு எடை போடப்பட்டு கொள்முதல் செய்யப்படும். இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம் 45 லட்சம் சாக்குகளை தயார் நிலையில் வைத்துள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு உரிய பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதால் டிசம்பர் 25-ந்தேதி முதல் தஞ்சை மண்டலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கொள்முதல் நிலையம் செயல்படத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top