மல்லிப்பட்டினம் கிழக்குக் கடற்கரை வழியாக 10,000 கோடியில் புதிய நான்குவழிச்சாலை.

Unknown
0
சென்னையில் இருந்து குமரி வரை 10 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் அமைக்கப்படும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு, இரு ஆண்டு இழுபறிக்கு பின்னர் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தின் தென்கோடியிலுள்ள கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம் வழியாக சென்னை வரை 750 கிமீ தூரத்திற்கு தேசிய நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நான்குவழிச்சாலையை ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, சென்னை முதல் கன்னியாகுமரி வரை, மற்றொரு தேசிய நான்குவழிச்சாலை அமைப்பதே தீர்வு என முடிவு செய்யப்பட்டது. இதன்படி உருவாக்கப்பட்டதே கிழக்கு கடற்கரை (இசிஆர்) சாலை திட்டம். இதில், பெரும்பகுதி தற்போது இருவழிப் பாதையாக உள்ளது. இதுவும் கன்னியாகுமரி வரை முழுமையாக இல்லை. தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி வரை சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தபடி நிதி ஒதுக்கீடு இல்லாமல் பல ஆண்டுகள் சாலைப் பணி முடங்கிக் கிடக்கிறது. கிழக்கு கடற்கரைச் சாலை, 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி தேசிய நான்கு வழிச்சாலையாக உருவாக்கப்படும் என 2 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது.

இதற்காக, தற்போதுள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைத்து, திட்டத்திற்கான பரிந்துரை அனுப்பும்படி மத்திய அரசு கேட்டது. அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்ததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2 ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு, தமிழக அரசு கிழக்கு கடற்கரை நான்குவழிச்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது சட்டப்பேரவை கவர்னர் உரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான பட்ஜெட் பிப்ரவரி முதல் வாரம் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், கிழக்கு கடற்கரைச் சாலை ‘பாரத மாதா சாலை’ என்ற பெயரில் அறிவிப்பு வெளியாவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘தமிழக அரசின் சம்மதத்திற்காக 2 ஆண்டுகளாக காத்திருந்தோம். திட்டம் கை நழுவி போய்விடுமோ என அஞ்சினோம். கடைசி நேரத்தில் தமிழக அரசு சம்மதித்து பரிந்துரை அளித்து இருப்பதின் மூலம் திட்டம் கைகூடி உள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிதாக 600 கிமீ தூரத்துக்கு புதிய சாலை திட்டங்களும், மேம்பாடு விரிவாக்க பணிகளும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. ₹10 ஆயிரம் கோடியில் உத்தேச மதிப்பீடு மற்றும் திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு உயர வாய்ப்புள்ளது. திட்டத்துக்கு ‘கிரீன் சிக்னல்’ கிடைத்து விட்டதால் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.

போக்குவரத்து நெரிசல் 40 சதவீதம் குறையும்
கிழக்கு கடற்கரை நான்குவழிச்சாலை திட்ட அறிக்கையில், ‘‘சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, காரைக்கால், நாகூர், வேதாரண்யம், மல்லிப்பட்டினம், ராமநாதபுரம், ஏர்வாடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் வழியாக கிழக்கு கடற்கரைச் சாலை அமையும். இதன்மூலம் சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக குமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் 40 சதவீதம் குறைய வாய்ப்பு ஏற்படும்.’’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top