பேராவூரணி கடைமடை பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை நடவு பணி பரவலாக நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், வாத்தலைக்காடு, வீரியங்கோட்டை, மரக்காவலசை, முடச்சிக்காடு, கைவனவயல், கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், விளங்குளம், சோலைக்காடு, முதுகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு மேலாக ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த தண்ணீர் கிடைக்காததால் முழுமையாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை.
மேலும் ஆழ்குழாய் கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள், பரவலாக கோடை சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு நிலத்தடி நீர்மட்டம் 200 அடியை தாண்டியதுடன் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி நின்று போய்விட்டது. அதுமட்டுமின்றி மும்முனை மின்சாரமும் தடையின்றி கிடைக்கவில்லை. இதனால் கோடை சாகுபடியையும் விவசாயிகள் கைவிட்டனர். தற்போது கடைமடையில் பரவலாக மழை பெய்துள்ளது. மும்முனை மின்சாரமும் ஓரளவு கிடைக்கிறது. இதை பயன்படுத்தி ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கடைமடை விவசாயிகள் குறுவை நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பேராவூரணி கடைமடை பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை நடவுப்பணி தீவிரம்.
July 07, 2018
0
Tags
Share to other apps