குடைமிளகாய் சாகுபடி தொழில் நுட்பம்.

Unknown
0
குடைமிளகாய் சாகுபடி தொழில் நுட்பம். சாகுபடி முறை
நாற்றங்காலுக்கு 50 சதவீத நிழல்வலை போதுமானது. ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். நாற்றுக்களை குழித் தட்டுகளில் வளர்க்க வேண்டும். குழித் தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ கலந்து நிரப்ப வேண்டும்.
ஒரு எக்டருக்கு சுமார் 200 கிராம் குண்டு மிளகாய் விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ் பைரில்லத்தைக் கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும். விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டுப் பாத்திகளின் மீது வைக்க வேண்டும். விதை முளைக்கும்வரை ஒரு நாளைக்கு 2 முறை என்ற முறையில் தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். 3 சதவீத (30மிலி/லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்குப் பின் தெளிக்க வேண்டும்.
விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவீத மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்டச்சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 35 நாட்களில் பாப்ரிகா நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்.
நடவுமுறைகள்
* கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும்.
* அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஒரு எக்டருக்கு 703 கிலோ என்ற அளவில் கடைசி உழவின்போது இடவேண்டும்.
* அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 5 கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழு உரத்துடனும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இடவேண்டும்.
* கடைசி உழவுக்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
* நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின்மூலம் நனைக்க வேண்டும்.
* நடவுக்கு முன்எக்டருக்கு 1லி என்ற அளவில் முளை முன் களைக் கொல்லியான புளூகுளோரலின்அல்லது பெண்டி மெத்தலின் தெளிக்க வேண்டும்.
* 35 நாட்கள் வயதான குடைமிளகாய் செடிகளை 0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்தபிறகு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 60 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
* 10 குடைமிளகாய் செடி வரிசைகளுக்கு இடையில் ஒரு வரிசை 40 நாட்கள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.
* நடவு செய்த 7ம் நாள் சந்துக்களை நிரப்ப வேண்டும்.
பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்
சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின்மீது தெளிக்க வேண்டும். நடவு செய்த 30 மற்றும் 60ம் நாள் களையெடுக்க வேண்டும். நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட் ஒரு சதவீதம் என்றளவில் நடவு செய்த 60 மற்றும் 100ம் நாட்களில் தெளிக்க வேண்டும். டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி. என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.


பிளானோபிக்ஸ் 0.25 மிலி/லி என்றளவில் தண்ணீருடன் கலந்து 45, 60 மற்றும் 90ம் நாட்களில் தெளிக்க வேண்டும். நன்கு வளர்ச்சி அடைந்த காய்களை நடவு செய்த 70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பவேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top