பேராவூரணி கடைமடை பகுதிக்கு அணை திறந்து 30 நாட்களுக்கு மேலாகியும் ஆடிபட்டம் சாகுபடி கைவிட்டு போன நிலையில் முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளான பள்ளத்தூர், ஆண்டிகாடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கழனிவாசல், முதுகாடு, மணக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருசில வருடங்களாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது.
தற்போது அணை திறந்து 30 நாட்களுக்கு மேலாகியும் கடைமடை பகுதிக்கு முழுமையாக இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. மேலும் கடைமடை பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய ஏரிகளும் தண்ணீரின்றி வரண்டு போய் உள்ளது. தற்போது முறை வைக்காமல் 20 நாட்களுக்கு கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வழங்கினால் ஏரிகளை நிரப்புவதுடன் ஒரு போக சம்பா சாகுபடிக்கு நாற்று விடும் பணிகளை துவக்கி விடலாம் என கடைமடை விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.