பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா வட்டார வள மைய மேற்பார்வையாளர் பரமசிவம் அவர்கள் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பையா, மருத்துவர் சீனிவாசன், கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன், அரசுசாரா நிறுவனப் பார்வையாளர் லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் அரிமா சங்கம், சுழற் சங்க நிர்வாகிகள், திருக்குறள் பேரவைப் பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினரின் மகன் கோ.இளங்கோ, பள்ளிப் புரவலர்கள், பெற்றோர்கள், பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள், செய்தியாளர்கள் ஆகிறோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் இரா.ர.சுபாசு வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளித் தலைமையாசிரியர் ச.சித்ராதேவி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை பள்ளியாசிரியர்கள் சுபா, சத்தியா, மகாதேவி, பேபி ஆகியோர் ஒழுங்குபடுத்தினார்கள். பள்ளி இலக்கியமன்றம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் புரவலர் சார்பில் பேசிய மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் "இப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணி செய்கிறார்கள். பள்ளிக்கு நிறைய தேவைகள் உள்ளது. பள்ளித் தேவைகளை உணர்ந்து பள்ளிக்கு புரவலர்கள் அதிகரிக்க வேண்டும். பள்ளிக்கு தேவையான உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் செய்து கொடுக்க வேண்டும். நான்கு தலைமுறையினருக்குச் சொந்தமான இப்பள்ளி பல்வேறு கல்வியாளர்களையும், அரசியல்வாதிகளையும், விஞ்ஞானிகளையும், தொழிலதிபர்களையும் உருவாக்கியுள்ளது. இப்பள்ளியில் படித்த ஒவ்வொருவரும் பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை மாணவர்களுக்கு வகுப்பெடுக்க தடையாக அரசு பல்வேறு பணிகளை ஆசிரியர்கள் தலையில் சுமத்துகிறது, இந்நிலை தடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்காக பயிற்சிகள் பள்ளி வேலைநாட்களில் நடத்தாமல் விடுமுறை நாட்களில் நடத்தப்படவேண்டும். மாணவர்களின் கல்வியில் பாதிப்பை உண்டாக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களோ, வட்டார வள மைய அலுவலர்களோ வேலைச்சுமையை ஏற்படுத்தக்கூடாது " என்றார்.
பள்ளியின் ஆண்டுவிழா பள்ளி வளாகத்துக்குள் சிறிய இடத்தில் நடைபெற்றது. பெற்றோர்களும், மாணவர்களும் அமர்ந்து நிகழ்வுகளை கவனிக்க முடியவில்லை. வரும் ஆண்டுகளில் பள்ளிக்கு அருகில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்று மெய்ச்சுடர் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
நன்றி : மெய்ச்சுடர்