பேராவூரணி கடைமடைப்பகுதி ஏரி, குளங்களில் நீர் நிரப்புவதாக ஒப்புதல் விவசாயிகள் சங்கம் போராட்டம் எதிரொலி.
நவம்பர் 27, 2017
0
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதிகளில் ஏரி, குளங்களில் தண்ணீர்நிரப்பித்தருவதாக பேச்சுவார்த்தையில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டதால் நவம்பர் 27 ஆம் தேதி முதல் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக நடைபெறவிருந்த தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடைப்பகுதிகளில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன் மற்றும் சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதில் கடைமடைப் பகுதியில் தண்ணீர் இன்றி வறட்சியான சூழல் நிலவுகிறது.
சோலைக்காடு, பெருமகளூர், கழனிவாசல், கொரட்டூர், அம்மையாண்டி ஆகிய பகுதிகளில் கால்நடைகள் தண்ணீருக்காக தவிக்கும் நிலைஇருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கடைமடைப் பகுதி ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பித்தர வேண்டும். மெயின் வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர்திறந்து விட வேண்டும். இல்லையென்றால் நவம்பர்27 திங்கட்கிழமை முதல் பேராவூரணியில் பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பாக விவசாயிகள் சங்கம் சார்பில்விவசாயிகளை திரட்டி மாபெரும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை காலை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் மதிவாணன், ராஜமாணிக்கம், செந்தமிழ் ராஜா, நாராயணசாமி, புஷ்பராணி,காவல்துறை உதவி ஆய்வாளர் ராம்மூர்த்தி ஆகியோர் அரசுத்தரப்பிலும், விவசாயிகள் தரப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன், மாதர்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன், சிபிஎம் ஒன்றியச்செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, சிபிஎம் நகரச்செயலாளர் வே.ரெங்கசாமி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், வீரப்பெருமாள், இராமநாதன், நீலகண்டன், எம்.எஸ்.கருப்பையா, இந்துமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், ‘தொடர்ந்து முறைவைக்காமல் 15 தினங்களுக்கு கடைமடைப் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும். ஏரி, குளங்களை நிரப்பித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க