மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பழங்கால பண்பாட்டு பொருட்கள் கண்காட்சி.

Unknown
0புதுக்கோட்டை மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களால் சேகரிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பழங்கால நாணயங்கள் , இரும்புக்கழிவுகள் , ஓலைச்சுவடிகள் , கல்வெட்டு படிகள் உள்ளிட்டவை மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இக்கண்காட்சியை பள்ளித்தலைமை ஆசிரியர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். உதவித்தலைமை ஆசிரியர் குமரவேல் வரவேற்றார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனருமான மங்கனூர் மணிகண்டன் செய்திருந்தார். புதுக்கோட்டைநாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இக்கண்காட்சியில் பழங்கால செங்கற்களை சுக்ரன், குளம் வெட்டியதற்கான கல்வெட்டு படிகளை ஹரிகர சுதன் , நொடியூர் சிவன் கோவிலுக்கு வியாபாரி நெய் வழங்கியதற்கான கல்வெட்டு படி விளக்கத்தை நமச்சிவாயம், நொடியூர் குமிழி கல்வெட்டு படியை ஜெகதீஸ், பழங்கால விளையாட்டு பொருட்கள் சங்கு வளையல்,விளையாட்டு சில்லுகள் பற்றி சஞ்சய்ஸ்ரீ, கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் செல்லும் வழியிலுள்ள இச்சடியம்மன் கோவில் திடலில் விரவிக் கிடந்த சுடுமண் இரும்பு உருக்கு குழாய்கள், இரும்புக்கழிவுகள்,பழங்கால உடைந்த வாளின் உடைந்த துண்டு ஆகியவற்றை ஜனார்த்தனன், சிவனேஷ், பழங்கால கருப்பு சிவப்பு பானைகளின் விளிம்பு வேலைப்பாடுகள் பற்றி ஹரிகரன், முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்கள், தாங்கிகள் ஆகியவற்றை சுதிவர்மன், வாண்டையான்பட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட ரவ்லட் பானை வகையை சார்ந்த தாங்கியை கமலேஷ், மருத்துவ மற்றும் வீட்டில் தமிழ் எண்களுடன் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை முத்துராம், பானைக்குறியீடுகள், தேய்ப்புக்கற்களை பாலமுருகள் , நுண்கற்கால கருவிகளை கார்த்திக், ஓவியக்கலையின் பரிணாம வளர்ச்சி குறித்த காட்சிப்பொருட்களை கோசல் ராம் , ஆங்கிலேயர் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் புழக்கத்தில் இருந்த 50 நாணயங்களை சபரிநாதன் ஆகியோர் காட்சிப்படுத்தி இருந்தனர்.
ஓவியஆசிரியர் மனோகரன் பல்வேறு வகையான வண்ணப்பூச்சுகள், பலவகையிலான கலைப்பாணியிலான ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தார்.
இக்கண்காட்சியில் புதுக்கோட்டை தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் புழக்கத்திலிருந்த அம்மன் காசுகள் , ஈஸ்ட் இந்தியன் கம்பனி , எட்வர்ட் கிங் எம்பரர், ஜார்ஜ் ஆங்கிலேயே மன்னர் மற்றும் விக்டோரியா ராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 நாணயங்களும் மாணவர் செ.சபரிநாதனால் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது,
அவரிடம் நாம் இந்த சேகரிப்பு குறித்து கேட்ட போது எனது பாட்டியின் ஆர்வத்தின் காரணமாக சேகரிக்கப்பட்ட நாணயங்கள் தான் இவை, தற்போது இதனைக்காட்சிப்படுத்துவதன் மூலம், எனது மாவட்டத்தின் பழங்கால ஆட்சி முறையில் தொண்டைமான் மன்னர்களின் தனித்துவ அடையாளமாக விளங்கியது அம்மன் காசு, என்ற வரலாற்று செய்தியை எனது ஆசிரியர் மூலம் அறிந்தேன், இதை மற்றவர்களுடன் பகிரவும் இது போன்ற பொருட்களை பேணி பாதுகாப்பதும் நமது கடமை என்பதை உணர்த்தவும் காட்சிப்படுத்தியுள்ளேன் என்றார்.
கருப்பு சிவப்பு பானை ஓடுகளை சேகரித்து காட்சிப்படுத்திய மாணவர் சுதி வர்மன் இதைப்பற்றி கூறுகையில், எனது ஆசிரியரோடு விடுப்பு நாட்களில் கோயில்கள், பழங்கால வாழிடங்களுக்கு பலமுறை சென்று வந்துள்ளேன் குறிப்பாக எங்கள் ஊரான மங்கனூருக்கு செல்லும் வழியில் அரவம்பட்டிக்கு சொந்தமான நிலப்பரப்பு உள்ளது. தற்போது அங்கே மண் தோண்டப்பட்டு கிடக்கிறது அதில் ஏராளமான கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் , இரும்பு கழிவுகளும் விரவிக்கிடக்கிறது என்று ஆசிரியரிடம் கூறினோம், அப்போது அவர் இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே நம்பள்ளி மாணவர்களால் பானை ஓடுகள், தாழியின் உடைந்த பகுதிகள் , இரும்புக்கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதையும் அவற்றை அந்நாளைய வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளதையும் , அவற்றில் ஒரு சில பொருட்கள் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வருவதையும் எங்களுக்கு காட்டினார்.
தற்போது அதே இடத்தில் இரும்பு கத்தியின் உடைந்த பகுதி, ரவ்லட் கருப்பு நிற பானை ஓடுகள் உள்ளிட்டவற்றை எங்களது மன்றம் மூலம் சேகரித்து காட்சிப்படுத்தியுள்ளதையும் தெரிவித்தார். மேலும் இவ்விடத்தில் இரும்பு கால வாழிடம் இருந்தது என்பதை எமது குழுவின் தேடலால் அறிய முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அக்கச்சிப்பட்டி ஊர் பெயராய்வு குறித்து கள ஆய்வு தகவல்களை சிறு ஆய்வு செய்துள்ள ஜனார்த்தனன் கூறும்போது அக்கச்சிப்பட்டி என்பது முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னர் தனது அக்காவிற்கு சீராக அதாவது சீதனமாக வழங்கியதாகவும் அந்த நிகழ்வின் அடிப்படையில் இவ்வூர் “அக்கா சீர் பட்டி “ என்று வழங்கப்பட்டு பின்னாளில் மருவி அக்கச்சிப்பட்டி என்றானதாக தெரிய வந்துள்ளது என்றும் இது குறித்த வரலாற்று சான்றுகளை தேடி வருவதாகவும் தம்மோடு இப்பணியை சிவனேஷ் , நமச்சிவாயம் ஆகியோர் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கண்டுகளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top