ஜனவரி 31 ஆம் தேதி நிகழும் முழு சந்திர கிரகணத்தை சிவந்த நிலா என்ற பெயரில் அழைக்கின்றனர். இதை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலை, ராசிபுரம் ஆகிய இடங்களில், டெலஸ்கோப் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதை வெறும் கண்களுடனும் பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க, நாமக்கல் மாவட்ட செயலர் சுரேந்தர் கூறியது: வரும் 31-ஆம் தேதி நிலா உதிக்கும்போதே பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு உதிக்கும். அந்த சமயத்தில் சூரிய ஒளி நிலவின் மேல் நேரடியாக படாது. ஆனால் நமது வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலவின் மேல் படும்.
குறைந்த அலைநீளமுள்ள ஒளிக் கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதுதான் சிவப்பு நிலாவாக தோன்றுகிறது. மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும். 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும் இரவு 9.38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும். சிவப்பு நிலா 152 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அதிசயம் என்றார்.