தஞ்சை மாவட்டத்தில் வீட்டு தோட்ட காய்கறி விதைகள் 40% மானியம்.

Unknown
0
தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டு தோட்ட காய்கறி விதைகள் 40 சதவிகித மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தின் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டச் சத்துள்ள உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டுத்தோட்டங்களில் காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு முன்னோடி முயற்சியாக,  வீட்டுத்தோட்ட காய்கறி பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், 08-11-2017 அன்று துவங்கப்பட்டது. இதன்படி, நடப்பாண்டு ரூ.20/- மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, புடல், பாகல், பீர்க்கன், கீரை வகைகள், மிளகாய் மற்றும் கொத்தவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் ஐந்து காய்கறிகள் அடங்கிய காய்கறி விதை பாக்கெட்டுகள் அனைத்து மாவட்ட புறநகர்ப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 40 சதவீதம் மான்ய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  ரூ.20/- மதிப்புடைய ஒரு காய்கறி விதை பாக்கெட்டுக்கு அரசு மானியமாக ரூ.8/-ஆக வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ.12/- செலுத்தி காய்கறி விதை பாக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதற்கென 2017-2018 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கு ரூ.1.68 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஆறு காய்கறி பாக்கெட்டுகள் வரை பெறலாம்.  இப்பாக்கெட்டுகளை கிராமங்கள் மற்றும் புறநகர்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் பெற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top