வருவாய்த்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முடங்கியது.“புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய்த்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நேரடி நியமன துணை ஆட்சியர்களுக்கும் பாரபட்சமின்றி பணியிடங்களை வழங்க வேண்டும். பிறப்பு - இறப்பு சான்றுகள் வழங்கல் மற்றும் நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்தல் போன்ற பணிகளை செம்மையாக செய்திட புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். வருவாய்த்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மண்டல அளவில் மாவட்ட தலைநகரங்களில் டிச.23 உண்ணாவிரதம் மற்றும் கண்டன போராட்டம் நடைபெற்றது.இதையொட்டி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 20 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர், செவ்வாய்க்கிழமை அன்று ஒருநாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. 48 பேர் வேலை செய்யவேண்டிய வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்சமயம் 22 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்து ஊழியர்களும் விடுப்பில் சென்றதால் வட்டாட்சியர் அலுவலகப்பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு பணிகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகப் பணிகள் முடங்கியது.
ஜனவரி 24, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க