தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் வரும் மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி மறுவரையறைக்கான இறுதிகட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 2011ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. மக்களின் ஆட்சேபனை, கருத்துகள் சொல்ல வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவதாக இருந்தது. தற்போது அது வருகிற 5ம் தேதி வரை நீட்டித்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இட ஒதுக்கீடு அடிப்படையிலான வார்டு வரையறைகள் முடிவுக்கு வரும்.
வார்டுகளின் எண்ணிக்கைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மறுவரையறை செய்துள்ளது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் வார்டு வரையறை முடிந்து அடுத்த மாதம் அந்த விபரங்களை வெளியிடவுள்ளது. அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள், வார்டுகள் யார், யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரியவரும். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிப்பை வெளியிடும் என்பதால் மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.