பேராவூரணி வேளாண்மை அதிகாரி விளக்கம் நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கரைசல் மற்றும் பயிர் ஊக்கி மருந்து தெளிக்க வேண்டும்.
பிப்ரவரி 07, 2018
0
நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கரைசல் மற்றும் பயிர் ஊக்கி மருந்து தெளிக்க வேண்டும் என்று பேராவூரணி வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பேராவூரணி வட்டாரத்தில் நடப்பு ராபி பருவத்தில் 1500 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவை தற்சமயம் 30 நாள் பயிர்களாகவும் - பூக்கும் தருணத்தில் உள்ள பயிர்களாகவும் உள்ளது. தற்சமயம் அவற்றிற்கு ஊட்டச்சத்து கரைசல் மற்றும் பயிர் ஊக்கி மருந்து கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும்.
தற்சமயம் பூக்கும் நிலையில் உள்ள நிலக்கடலை பயிருக்கு பயிர் ஊக்கி மருந்து கரைசல் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உதிர்ந்து கொட்டுவது தவிர்க்கப்படுவதுடன் பூக்கும் திறன் ஊக்குவிக்கப்பட்டு பூ உற்பத்தியாதல் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பூக்கள் அனைத்தும் பூமிக்குள் விழுதாக இறங்கி அனைத்தும் காய்களாக உருவாகிறது. இதற்கு ஃபிளானோபிக்ஸ் என்ற பயிர் ஊக்கி 150 மில்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் தெளிக்க வேண்டும். ஃபிளானோபிக்ஸ் கரைசலை எப்பொழுதும் தனியாகத்தான் தெளிக்க வேண்டும். பிற ஊட்டச்சத்து கரைசலுடனோ (அல்லது) பூச்சிக்கொல்லி மருந்திடனோ கலந்து தெளிக்கக் கூடாது.
அதேபோன்று பூக்கும் தருணத்தில் நுண்ணூட்டச் சத்து கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு 1 கிலோ டி.ஏ.பி. உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கலக்கிவிட்டு ஊறவைக்க வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் 500 கிராம் அம்மோனியம் சல்பேட் உரம் மற்றும் 400 கிராம் போராக்ஸ் நுண்சத்து ஆகியனவற்றை கலந்து அக்கரைசலை 190 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் (அல்லது) “போலிபார்” என்ற வணிகப் பெயரில் தனியார் விற்பனை மையங்களில் உள்ள போரான் நுண்ணூட்டச் சத்து 250 கிராம் பவுடரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். போரான் சத்து நிலக்கடலை பயிருக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
இவை இடப்படுவதால் கடலை ஓடு கெட்டி தன்மையடைகிறது. இதனால் கடலை பருப்பு சுருக்கமின்றி பருமனாக கிடைக்கிறது. எண்ணெய் சத்து அளவும் அதிகரிக்கிறது. எனவே, நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட தொழில்நுட்பங்களை தவறாமல் கடைப்பிடித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க