பேராவூரணி, சேதுபாவா சத்திரம் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்கள், நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:"பேராவூரணி வட்டாரம் முழுவதுமே, மழை பொய்த்ததால், ஏரி குளங்கள், நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. விவசாயப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆடு, மாடுகளுக்குக் கூட குடிக்க தண்ணீர் இன்றி தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோடையின் தாக்கத்தால் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.இச்சூழலில் பேராவூரணி வட்டாரத்தில் உள்ள ஆவணம், சித்தாதிக்காடு, அம்மையாண்டி, ஊமத்தநாடு, பெருமகளூர், விளங்குளம், வீரியங்கோட்டை, கொரட்டூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சிறியதும், பெரியதுமான பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் வறண்டு போய், காட்டாமணக்கு செடிகள் மண்டி, மணல் மேடிட்ட நிலையில் புதர்களாய் காட்சி அளிக்கின்றன.பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள நீர்நிலைகளை உடனடியாக தூர்வாரி, வரும் மழை பருவத்திலாவது தண்ணீர் தேக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் பொதுக்குளங்களில் மண் அள்ள அனுமதிக்கப்படுவதால் ஆங்காங்கே உள்ள ஏரிகளில் மண் அள்ளி, பள்ளம் ஏற்படுகிறதே தவிர முறையான தூர்வாருதல் நடைபெறவில்லை.
மேலும் 100 நாள் வேலை திட்டமும் தற்போது நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நூறு நாள் வேலை திட்டத்தை துவங்கி இப்பகுதியில் உள்ள ஏரி குளங்களை மராமத்து செய்ய வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, மராமத்து செய்வதன் மூலம் வரும் பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க முடியும். போர்க்கால அடிப்படையில் முறையாக திட்டம் தீட்டி, அந்தந்த பகுதி விவசாயிகள் கண்காணிப்பில், நீர்நிலைகளை மராமத்து செய்ய வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில், மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்கும் விதமாக, உரிய இடங்களை கண்டறிந்து தடுப்பணைகளை அமைக்க வேண்டும். முறைகேடின்றி தூர்வாரும் பணி நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். வரும் காலங்களிலாவது விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதி ஏரி, குளங்களை தூர்வார கோரிக்கை.
மே 20, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க