பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வியாழக்கிழமையன்று, 1432 ஆம் பசலிக்கான, பேராவூரணி வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு, வருவாய் தீர்வாயம், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் வீ.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வருவாய் கோட்டாட்சியர் வீ.பிரபாகர் பேசுகையில், "இந்த வருவாய் தீர்வாயத்தில்
பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, போக்குவரத்து வசதி என
மொத்தம் 481 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இதில் 211 மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏனைய மனுக்கள் அனைத்தும் நடவடிக்கையில் உள்ளன. அவை அனைத்தும் விசாரணை செய்து ஒரு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும்.
தீர்வுக்கான விவரங்கள் ஒவ்வொரு மனுதாரருக்கும் தெரிவிக்கப்படும். இந்தக் குடிகள் மாநாட்டில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். அவற்றை நிறைவேற்றி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் பொது மக்களின் கோரிக்கைகளை விதிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நியாயத்தின் அடிப்படையிலும் சட்டத்திற்குட்பட்டு, செய்து தர வேண்டும், அவ்வாறு செய்து தருவீர்கள் என்று நம்புகிறேன்.
வருவாய் தீர்வாயத்தில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். உங்கள் நம்பிக்கை வீண் போகாது. வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்பட வேண்டும்" என்றார்.
இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ப.அருள்ராஜ், தலைமை உதவியாளர் பிரேம்குமார், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெ.பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் தி.அருள்மணி, வட்டத்துணை ஆய்வாளர் இரா.செந்தில்குமார், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் வெ.கண்ணகி, வட்ட சார ஆய்வாளர் ரெ.சந்தோஷ், குறுவட்ட அலுவலர் எம்.எஸ்.கோபி, சரக வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்