பேராவூரணி, நவ 25
பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், முதலமைச்சரின் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
வட்டாரத் தலைவர் கமலஹாசன் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில், பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் எவரேனும் இறந்து விட்டால், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வாரிசுக்கு வேலை வழங்கப்பட்டது. இந்த நடைமுறை தற்போது கடந்த மார்ச் 2023 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்கள் பெற்று வந்து, தற்போது நிறுத்தப்பட்டுள்ள எரிபொருள் படி ரூ.2 ஆயிரத்து 500 ஐ திரும்ப வழங்க வேண்டும். ஜனவரி 2023க்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும், அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். காலம், நேரம் பார்க்காமல், 24 மணிநேரமும் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம், டி பிரிவில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், நீலகண்டன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் விஜயகுமார், செயலர் சத்யா, பொருளர் அம்பிகா, சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.