செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கியது.
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இந்த மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில், மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் தனித்திறன்களை அடையாளப்படுத்துவது, நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள், சாதிப்பதற்கான சிக்கல்களை தெரிந்து கொள்ள உதவுவது, சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகளை விளக்குவது, குழு செயல்பாடுகள் மூலம் வெற்றி பெற ஊக்கப்படுத்துவது, நேர மேலாண்மை, தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி, தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்.
இந்த பயிற்சிகள் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், உயர்கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அறக்கட்டளையால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி வாழ்த்துரை வழங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்றுநர் இளங்கோ மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக பயிற்சியின் நோக்கங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் விளக்கி கூறினார்.