தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜனரஞ்சனி, அண்மையில் ராஜஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணியில் விளையாடி, அணி சார்பில் தங்கம் வென்றார். அவரை பாராட்டும் வகையில், பேராவூரணியில் செயல்பட்டுவரும், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை, மாணவி ஜனரஞ்சனியை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் கொடுத்து, நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர். நிகழ்வுக்கு, அறக்கட்டளை தலைவர் நாகேந்திர குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் முகமது முஸ்கிர், செந்தில்குமார், டாக்டர் அருண் சுதேசஸ், மகாராஜா, கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மாணவி ஜனரஞ்சனியை வாழ்த்தி பலரும் பேசினர். விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி, தாமரைச்செல்வன், பேரின்ப முத்துக்குமார், விஜய் பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் செயலாளர் சண்முகநாதன் மற்றும் பொருளாளர் வன்மீகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.