பேராவூரணி, ஜன 20
பேராவூரணி அருகே மனோரா இசிஆர் சாலையில் இருந்த தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி. 7 பேர் பலத்த காயம் தஞ்சை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த மரியசெல்வராஜ்(37), இவரது மனைவி பத்மாமேரி(31), இவரது மகன் சந்தோஷ்செல்வம்(7), அதேப் பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய்(53), சரஸ்வதி(50), கணபதி(52), லதா(40), ராணி(40), ஞானம்மாள்(60), பாக்கியராஜ்(62) டிரைவர் சின்னபாண்டி(40) ஆகிய 11 பேரும் வேளாங்கண்ணி தேவாலயத்தில் சந்தோஷ்செல்வத்திற்கு முடி இறக்குவதற்காக வெள்ளிக்கிழமை இரவு டவேரா காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை பேராவூரணி அருகே மனோரா பகுதியில் கார் வந்துக்கொண்டிருந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், ராணி, டிரைவர் சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து 108 உள்ளிட்ட 7 பேர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் பலத்த காயமடைந்த 7 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்து வருகின்றனர்.