தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 260 வாக்குச்சாவடிகளிலும், தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நவ.16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
திமுக ஆதரவு வாக்குகளை அவசியம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தி உள்ளது. இதற்காக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி, வாக்குச் சாவடி மையங்களில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், திமுக பார்வையாளர் புதுக்கோட்டை சரவணன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், சோம.கண்ணப்பன், பா.ராமநாதன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர் ஆகியோருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்குள்ள அரசு அலுவலர்களிடம் வாக்காளர் பதிவு விவரங்களை கேட்டறிந்ததுடன், திமுக வாக்குச்சாவடி முகவர்களிடம் பெயர்கள் விடுபடாமல் அனைத்து புதிய 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களை சேர்க்கவும், முகவரி மாற்றம், பெயர் மாற்றம், இறந்தவர்கள் பெயர் நீக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அப்போது அறிவுறுத்தினார்.