புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளின் படி, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான, நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரணப் பைகள் சரக்கு வேன் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.