பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில், காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு, ரோட்டரி சங்க தலைவர் சிவ.சதீஷ்குமார் தலைமை வகித்தார். மருத்துவர் சேது மற்றும் மருத்துவர் கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர் சேது மற்றும் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை குறித்து விரிவாக பேசினர். தாய்மார்களுக்கு, 18 வகையான உலர் தானியங்கள் மற்றும் பேரிச்சம்பழம், மில்கா பிரட் அடங்கிய பிளாஸ்டிக் கூடை கொண்ட ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்வில், மெடிக்கல் ப்ராஜெக்ட் சேர்மன் ஆர்டிஎன்.கிருஷ்ணன், முன்னாள் துணை ஆளுநர், முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், மூத்த உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, ரோட்டரி சங்க தலைவர் சிவ சதீஷ்குமார் செய்திருந்தார். முன்னதாக, சங்க செயலாளர் நீலகண்டன் வரவேற்றார். முடிவில் சங்க பொருளாளர் சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.