தஞ்சாவூர், செப்.8 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கே.கே. நகரில் திருமூலர் யோகாலயம் என்ற யோகா பயிற்சிப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் யோகா பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் 23 பேர் அண்மையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர். அவர்களுக்கு கின்னஸ் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் என்ற அமைப்பு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில், யோகா பயிற்சி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு, யோகாவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்திப் பேசினார்.
அப்போது, மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களை காட்டி வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து, யோகாவின் பல்வேறு ஆசனங்களை பார்வையாளர்கள் முன் செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். சிங்காரம், தொழிலதிபர் லயன்ஸ் சுப்பையா, மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக யோகாலய நிறுவனர் யோகி சு.விமல் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக, முடச்சிக்காடு ஆர்.சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.