தஞ்சாவூர், அக்.12 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்.
செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள, செருவாவிடுதி, காலகம், பின்னவாசல், குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், அங்கன்வாடி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளிகள் உள்ளிட்ட 96 மையங்களில் பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் மேற்பார்வையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
பேராவூரணி வட்டாரத்தில் 3,760 ஆண் குழந்தைகளுக்கும், 3,774 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 7,534 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட 391 குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று சொட்டு மருந்து வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
சொட்டு மருந்து வழங்கும் பணியில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.