இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழ்நாடு கிளையின் மாநில மாநாடு காரைக்குடியில் நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பேராவூரணி எலும்பு முறிவு மருத்துவர் துரை.நீலகண்டன் அவர்களுக்கு சிறந்த தமிழ் பணிக்கான மருத்துவர் பானுமதி முருகானந்தம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பேராவூரணி மக்களிடம் நன்கு அறிமுகமான எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரான மருத்துவர் துரை.நீலகண்டன், மருத்துவத்தை சாமானிய மக்களிடமும் கொண்டு செல்லும் வகையில், தமிழில் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார். மேலும், திருக்குறளின் மேன்மையை உணர்த்தும் வகையில் தமது மருத்துவமனையில் திருவள்ளுவருக்கு சிலை எழுப்பி, திருக்குறளை போற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விருது பெற்றுள்ள மருத்துவர் துரை.நீலகண்டன் அவர்களை நண்பர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
