பேராவூரணி பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட ஆதனூர் - திருவள்ளுவர்புரம் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குடிசைவாசிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேரூராட்சி பணியாளர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அப்பகுதியில் குடியிருப்போருக்கு தனது சொந்த செலவில் மதிய உணவு வழங்கினார்.
மனையற்ற ஏழை மக்களுக்கு இந்தப் பகுதியில் 68 பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சாலை வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்லத்தின் மூலம் வீடு கட்டித் தர வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.