தஞ்சாவூர், ஏப்.22 - பேராவூரணி கடைவீதியில் வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், சேது சாலை, முதன்மைச் சாலை, பட்டுக்கோட்டை சாலை, ஆவணம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. கடைக்காரர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்தும், சாலையில் நடைபாதை கடைகளை அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் வாகனங்கள் செல்வதற்கும், கடைவீதிக்கு வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் இடமில்லாமல் அவதிப்பட்டனர். மேலும், சாலை குறுகலாக இருந்ததால் விபத்து ஏற்படும் அபாயமும் இருந்தது. இந்நிலையில், வர்த்தகர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என வாகனத்தில் மைக் அமைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் மணிகண்டன் மற்றும் வர்த்தகர்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசி கால அவகாசம் கோரினர். ஆனாலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உறுதியாக தெரிவித்தனர். இந்நிலையில், காலை முதல் கடைவீதியில் வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது சாலை விரிவாக காணப்படுகிறது. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல், இதே நிலை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக, ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே வியாபாரிகள் அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.