தஞ்சாவூர் மாவட்டக் கடல்பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை கடந்த 2008-ஆம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில், கடலோர பதுகாப்பு குழுமம் சார்பாக, கடல் மார்க்கம் வழியாக ஊடுருவலை தடுக்கும் வகையில் புதன்கிழமை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், தஞ்சை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமம் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜ் மேற்பார்வையில், பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில், பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக்குழும ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், ராஜசேகர் மற்றும் காவல்துறையினர் பேராவூரணி பகுதியில், கொள்ளுக்காடு முதல் செம்பியன்மாதேவிப் பட்டினம் வரை, பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதையொட்டி, கடலோரப் பாதுகாப்பு காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும், கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடத்தில் அடையாள அட்டை, படகில் உள்ள ஆவணங்கள் மற்றும் படகில் மர்ம பொருள் இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு நடத்தினர். அதேபோல் துறைமுகம் மற்றும் கடலோர சாலைகள் மற்றும் சோதனை சாவடிகள் போன்றவற்றில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையானது 26 ஆம் தேதி வியாழக்கிழமையும் நடைபெற்றது.