பேராவூரணி தாலுகா ஆதனூர் கிராமத்தைச் சார்ந்த முனைவர் வேத கரம்சந்த் காந்தி. கணினி அறிவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கணினி அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில், இவர் தமது ஆராய்ச்சி குழுவினரோடு செயற்கை நுண்ணறிவு துணையோடு விவசாய விளைபொருள்களில், அதன் சிறிய பருவத்திலேயே அவற்றின் விளைச்சலை கணிக்கும் தானியங்கி அமைப்பை கண்டறிந்தார். அந்த கண்டுபிடிப்பை காப்புரிமை செய்ய, தமது குழுவினரோடு டெல்லியில் உள்ள அறிவுசார் காப்புரிமை மையத்தை அணுகி விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில் கண்டுபிடிப்பு பரிசீலிக்கப்பட்டு, இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் இருந்தாலும், அதை விவசாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி அதன் மூலம் ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பெற்றுள்ள பேராசிரியர் வேத கரம்சந்த் காந்தி, கணினி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று,பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமைச் சான்று பெற்ற பேராசிரியரை பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
