தஞ்சாவூர், ஜன.7 - பேராவூரணி அருகே ஒட்டங்காடு கிராமத்தில் மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை (இன்று) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒட்டங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் விலகி தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு இருவரும் கட்சி வேட்டி அணிவித்து வரவேற்று வாழ்த்தினர். அப்போது, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றியக்கழக செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீது, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
