தஞ்சாவூர், பிப்.10 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சோழகனார்வயல் கிராமத்தில் கடந்த பிப்.7 ஆம் தேதியன்று வெறிநாய் ஒன்று பொதுமக்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட கால்நடைகளை கடித்தது. இதில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 5 பொதுமக்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி தவணை முறையில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மரு. இ.விஜயராகவன் வழிகாட்டுதலின்படி, உடனடியாக சோழகனார்வயல் கிராமத்தில் 25 வளர்ப்பு நாய்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட மாடுகள், ஆடுகள் மற்றும் நாய்களுக்கு இரண்டாம் தவணை வெறிநோய் தடுப்பூசி செல்த்தப்பட்டது. இதில், கால்நடைத்துறை மருத்துவர்கள் சுரேஷ், விவேக், பிரகாஷ் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொண்டனர். தகவல் அறிந்து தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்ட கால்நடை துறையினரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.முகமது கனி மற்றும் கிராமத்தினர் பாராட்டினர்.
