பேராவூரணி, பிப்.24 -
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்.
பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில், தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
அதன்படி, பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை, கிராம உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர் வரையிலான 127 அலுவலர்கள் யாரும் பணிக்கு வராமல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தாலுகா அலுவலகங்களின் சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இன்று ( புதன்கிழமை ) வேலை நிறுத்தத்துடன் காத்திருப்பு போராட்டத்திலும் வருவாய்த்துறை சங்கத்தினர் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
